சமூகத்தேவைகளின் காலச்சுழற்சிக்கேற்ப கல்வி, பணி, வணிகம் பொருட்டு 1970 -களின் முற்பகுதிகளில் இலண்டன் மாநகரில் குடியேறிய மொழி மற்றும் இனப்பற்றுக்கொண்ட நம் முன்னோர்களால் தமிழர் முன்னேற்றக் கழகம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றளவும் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் அருந்தொண்டாற்றி, நம் பண்பாடு, கலாச்சாரம், ஒற்றுமை நம்மிடையே பேணிக்காப்பதுடன் அதை உலகிற்கு பறைசாற்றி நம் இளந்தளிர்கள் வாழையடி வாழையாகத் தழைத்தோங்கி தமிழ் வழி பயணிக்க நம் வாழ்வில் பெரும்பங்காற்றி வருகிறது. நம் மாணவச் செல்வங்கள் அன்னைத் தமிழை அறிந்து, கசடற கல்வி பெறுவதற்குத் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியை நிறுவியதோடல்லாமல் தாய்த்தமிழகத்திலிருந்து இலண்டனுக்கு வருகைதரும் அறிஞர் பெருமக்களை வரவேற்று உரையாற்றச் செய்தும், கலந்துரையாடலுக்கு வழிவகுத்து இலக்கிய முயற்சிகளுக்குத் துணைநிற்பதும் என பன்முகப் பணிகளைத் தமிழர் முன்னேற்றக் கழகம் தொய்வின்றி தொடர்ந்து செய்துவருகின்றது. இவ்வமைப்பின் அழைப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள் இன்றளவும் நம்முடன் தொடர்பில் இருந்து நம் மொழி வளர்ச்சிக்கு வழிகாட்டிவருவதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழகத்தில் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், தமிழர்களுக்கு உலக அளவில் நெருக்கடி நேரும்பொழுதும் இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தம்மால் ஆன உதவிகளை என்றென்றும் செய்துவருகின்றது.
இவ்வாறாக சற்றொப்ப அரைநூற்றாண்டாகத் தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழர் முன்னேற்றக்கழகம் பீடுநடை போடுவதற்கு காரணமான உங்களைப்போன்ற தமிழ் நலவிரும்பிகளை வணங்கி தம் பொன்விழாவினை விரைவில் கொண்டாடும் தருணத்தில் தங்களின் நெறிகாட்டலையும், வாழ்த்துகளையும் எதிர்நோக்கியுள்ளது.