TMK

பள்ளியைப் பற்றி

14.10.1975 இல் தமிழர் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டவுடன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டது. ஏழு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி இப்பொழுது இருநூற்று எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இயங்குகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்னும் பெருமை இப்பள்ளிக்கு உண்டு. பல்வேறு ஆசிரியர் பெருமக்கள் கல்விப்பணியாற்றி இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டுள்ளனர்.

திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் இசை வகுப்பும், நாட்டிய வகுப்பும் தொடங்கப்பட்டன. இதனால் பள்ளி விழாக்களிலும், பொங்கல் திருவிழாக் காலங்களிலும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கள் இசை, நாட்டியத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் க. பொ. த. சாதாரணம் (O Level) தேர்வில் 20 மாணவர்களும், உயர்தரம் (A Level) 15 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேறிவருகின்றனர்.

திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகின்றது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். தமிழ்ப்பற்றுடனும் தொண்டுணர்வுடனும் தமிழைப் பயிற்றுவிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலண்டனுக்கு வருகைதரும் தமிழ்க் கல்வியாளர்கள் இத் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்கு வருகைபுரிந்துள்ளனர்.

திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாட நூல்களை வழங்கிப் பயிற்றுவிப்பதுடன், தேர்வுகளையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றது. தமிழ்க் குழந்தைகள் கல்வியையும் நற்பண்புகளையும் பெறும் இடமாக இத் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி விளங்குகின்றது.

திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி இலக்கிய விழாக்கள், ஆண்டு விழாக்களை நடத்துவது, சிறப்பு மலர்களை வெளியிடுவது, அறிஞர் பெருமக்களை அழைத்துச் சிறப்பிப்பது போன்ற உயரிய பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றது. பொன்விழா ஆண்டினைக் கொண்டாடுவதற்கு அணியமாகிவரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, இலண்டனில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை நல்கிவருகின்றது.

Scroll to Top